Tamil Current Affairs 28th May 2017 TNPSC VAO Group 2A
தேசிய செய்திகள்
1) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக (பி.எப்) ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணத்தை 10 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் ஊழியர்கள், நிறுவனங்கள், அரசு பிரதிநிதிகள் இதனால் ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் குறைவதால் தற்போதைய முறைப்படி 12 சதவீதமே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
2) கால்நடை சந்தைகளில் இருந்து இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ தடை விதித்து மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை ‘அனிமல் ஈக்வாலிட்டி’ என்ற விலங்குகள் நல அமைப்பு வரவேற்றுள்ளது.
3) விமான சேவை வழங்கும் பொதுத் துறை நிறுவனமான ஏர்-இந்தியாவின் நிதிச் சிக்கலை ஒப்புக்கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதை தனியார்மயப்படுத்தும் யோசனைக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
4) கடலோர காவல் படை மற்றும் கடற்படை அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு கடற்படை அகாடமியில் நேற்று நடந்தது. இதில் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னேவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவர் சிறப்பாக பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பதக்கங்ளை வழங்கினார்.
5) பொருளாதார வாய்ப்புகள் தொடர இந்தியபெருங்கடல் பகுதியில் நிலவும் பொதுவான மற்றும் மாறுபட்ட அபாயங்களை திறமையான நிர்வாகம் மூலம் எதிர்கொள்வது தொடர்பாக மொரிஷியஸ்-இந்தியா இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் மொரிஷியஸ் மேம்பாட்டுக்கு சுமார் ரூ.3300 கோடி கடனுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
6) தில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
7) இலங்கையில் கன மழை, நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, கப்பல் மூலம் அந்நாட்டுக்கு மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருள்களை அனுப்ப வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
பன்னாட்டு செய்திகள் :
1) தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. தற்போதைய பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
2) அமெரிக்காவில் பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு குடியேற்ற உரிமையுடன் எச் 1 பி விசா வழங்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
3) சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஜேடி.காம், பின் தங்கிய கிராமப்புறங்களில் பொருட்களை சப்ளை செய்ய ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறது. தற்போது கிலோ கணக்கில் பொருட்களை கொண்டு செல்லும் இந்த ஆளில்லா விமானங்கள், 1000 கிலோவுக்கு அதிகமான வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் மேம்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
4) உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸின் கணினி முடக்கத்தால் லண்டன் ஹீத்ரு, காட்விக் மற்றும் பெல் ஃபாஸ்ட் விமான நிலையங்களிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் புறப்பட முடியாமல் நிறுத்தப்பட்டன.
5) இணையதளம் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பயங்கரவாதக் கருத்துகள் பரவுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
6) தென்சீனக் கடல் பகுதியில் பறந்த அமெரிக்க உளவு விமானத்தை சீன போர் விமானங்கள் இடைமறித்து விரட்டியுள்ளன.
விளையாட்டுச் செய்திகள் :
1) இந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டி கர்நாடக மாநிலம் மங்களுருவில் உள்ள சசிஹிதுலு கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் சென்னையை சேர்ந்த மணிவண்ணன், சூர்யா, அஜித் கோவிந்த், ராகுல் கோவிந்த், சதீஷ் மற்றும் கேரளாவை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
2) ஆசிய இளையோர் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் ரோகித் யாதவ் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்.
3) 9வது பீச் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் அடுத்த மாதம் (ஜூன்) 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் பீச் கபடி அணி தேர்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
4) தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம் சார்பில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் லீக் போட்டி ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதில் சென்னை, திருப்பூர் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
5) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், ஆணைய கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டி, பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபரி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய 10 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
6) கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் சென்னை வருமான வரித்துறை அணி மற்றும் மகளிர் பிரிவில் சத்தீஸ்கர் மாநில அணி வெற்றி பெற்றன.
7) அரசுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் தஞ்சாவூர், திண்டுக்கல், ஈரோடு அணிகளும் மற்றும் ஆண்கள் பிரிவில் திருச்சி, சென்னை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட அணிகளும் பங்கேற்றுள்ளனர்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாந்தா கொச்சாரின் மொத்த சம்பளம் கடந்த நிதியாண்டில் 64 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
2) டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் ஹோட்டல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகேஷ் சர்னா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
3) டிஎஸ்பி பிளாக்ராக் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான எஸ்.நாகநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
4) சூரிய சக்தியை மட்டும் பயன்படுத்தி உலகம் முழுவதும் எந்தவித நிறுத்தமில்லாமல் விமான பயணத்தை மேற்கொள்வதற்கு ரஷ்ய தொழிலதிபர் விக்டர் விக்ஸல் பெர்கின் நிறுவனமான ரெனெவோ குழுமம் திட்டமிட்டு வருகிறது.
5) சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் 200 மூட்டைகள் ரூ.3 லட்சத்துக்கு ஏலத்திற்கு போனது.
6) தனியார், அரசு உள்பட அனைத்து வங்கிகளும், 2011-16 வரையிலான 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.2.2லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.