தேசிய செய்திகள் :
1) ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட
மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி, முட்டை மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை
விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக
உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
2) நேபாள காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேர் பகதூர் தியூபா நேபாள நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
3) அமர்நர்த் யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்கள் தங்கள் உடல்நலம்
குறித்த மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம்
உத்தரவிட்டுள்ளது.
4) பெங்களுரு காந்திநகர் சட்டபேரவை தொகுதியில் ரூ.45 கோடி செலவில்
புதியதாக அமைக்கப்படும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் பணியை தொகுதி
பேரவை உறுப்பினர் தினேஷ் குண்டுராவ் தொடங்கி வைத்தார்.
5) கர்நாடகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்
படிக்க வைப்பதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
6) பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை, நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
7) மாநில அரசின் விவசாயக் கடன் ரத்து நடவடிக்கைகளால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
8) தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை நீடித்து வருவதால் நகரின் மின்
தேவை 6526 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று மின்சாரத் துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
9) ஜிசாட் – 19 செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக
நிலை நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி
தொழில்நுட்ப ரீதியாக புதிய கட்டத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று இஸ்ரோ
முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு செய்திகள் :
1) அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர்
தலைமையிலான குழு, கிரகங்கள் குறித்த ஆய்வை கடந்த 2016ம் ஆண்டு மே மாதம்
முதல் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில் சூரியனை விட இரு மடங்கு
பெரிதாகவும், வெப்பமாகவும் உள்ள கெல்ட் 9 பி என்ற கிரகத்தை வானியல்
நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2) தெக்ரானில் உள்ள புரட்சியாளர் ருஹொல்லா கொமெய்னி நினைவிடத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
3) இலங்கை ரெயில்வே மேம்பாட்டு பணிக்காக இந்தியா இலங்கைக்கு ரூ.2067
கோடி கடனுதவி வழங்குகிறது. இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று கொழும்புவில்
கையெழுத்தானது.
4) சீனாவில் உள்ள அமெரிக்க வெளியுறவு உயர் அதிகாரி டேவிட் ரேங்க் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
5) ஐ.நா சபையின் தலைமை அலுவலகத்தில் ‘கடல் மற்றும் சமுத்திர
ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் கடல்சார் மாநாடு தொடங்கியது. இதில் கடல்
வளங்களைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று ஐ.நா பொதுச்செயலாளர்
வலியுறுத்தியுள்ளார்.
6) உலகில் உற்பத்தி செய்யப்படும் 3ல் ஒரு பங்கு உணவு
வீணடிக்கப்படுகிறது என்று ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்ட நிர்வாகி ஸனெல்
போடோக்னிக் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள் :
1) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள்
ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை
வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
2) சர்வதேச அளவிலான 17வது மாற்றுத்திறனாளிகளுக்கான தனிநபர் செஸ்
போட்டி சுலோவாகியா நாட்டில் உள்ள ருசம்பர்க் நகரில் மே 28 முதல் ஜூன் 5ம்
தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்று திருச்சியை சேர்ந்த
ஜெனித்தா 5வது முறையாக சர்வதேச அளவில் தங்கம் வென்றுள்ளதால் இந்திய செஸ்
கூட்டமைப்பு அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
3) அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பாலாஜி ஆகியோருடன்
ஜூனியர் மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர்
வெங்கட்ராமன் கணேசன், தற்போது ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்
பிடித்துள்ளார்.
4) ஜெர்மனியின் டஸல்டர்ஃப் நகரில் நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.
5) மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில்
மதுரையைச் சேர்ந்த கோகுலன் தங்கப் பதக்கமும், ரிதீஷ் நித்தியன் வெள்ளி
பதக்கமும் வென்றனர்.
6) கியூபாவில் உள்ள வரடேரோ நகரில் கபாபிளான்கா நினைவு செஸ் போட்டி
நடைபெற்றது. 10 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியின் கடைசிச் சுற்றில் இந்திய
வீரரான சசிகிரண் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
7) கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்று வரும் பிரெஸிடென்ஸ் கோப்பை
குத்துச்சண்டைப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் லோவ்லினா
போர்கோஹெய்ன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
8) நடப்பாண்டில் இந்தியாவில் ரூ.1600 கோடி முதலீடு செய்யத்
திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் மற்றும் தலைமைச்
செயல் அதிகாரி மினோரு கட்டோ கூறினார்.
9) நாடு முழுவதும் தங்கத்தின் மீது ஜிஎஸ்டி வரி 3 சதவீதம்
விதிக்கப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து ஆபரண இறக்குமதி அதிகரிக்கும
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று வங்கிகளுக்கு தேசிய பண பட்டுவாடா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
11) மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்ந்து 31271 புள்ளிகளாக உள்ளது.
12) ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி கார்ப்பரேஷன் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.66 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
13) சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ
வங்கியின் மொத்த வர்த்தகம் சென்ற நிதி ஆண்டில் ரூ.13,500 கோடியை எட்டியது.
14) சோனாலிகா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை சென்ற மே மாதத்தில்
26.2 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற மே மாதத்தில் 8335 டிராக்டர்கள்
விற்பனை செய்யப்பட்டது.