தேசிய செய்திகள் :
1) வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், வருமான வரி கணக்கு தாக்கல்
செய்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கு எண்ணுடன் (பான் கார்டு) ஆதார் எண்ணை
இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் அல்ல என்ற சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு அளித்துள்ளது.
2) மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும்
ஒரே நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதே போல்
இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யோகா, இயற்கை
மருத்துவம் மற்றும் ஓமியோபதி, யுனானி ஆகியவை உள்ளடக்கிய ‘ஆயுஷ்’
படிப்புகளுக்கும் நீட் தேர்வை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.
3) நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி அடுத்த மாதம் 1ம் தேதி முதல்
அமலுக்கு வருகிறது. இந்நிலையில் சில மாநிலங்கள் பல பொருள்களின் வரி
விகிதங்களை மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளதால் இதற்கான இறுதி வரி
விகிதங்களை முடிவு செய்ய சரக்கு, சேவை வரி கூட்டம் நாளை டெல்லியில்
நடக்கிறது.
4) ஜிஎஸ்டி வரியானது இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
5) ஆரியானா மாநிலம் ஜிந்து மாவட்டம் பிபிபூர் கிராமத்தில்
பஞ்சாயத்து தலைவராக இருந்த சுனில் ஜக்லான் பெண்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு
திட்டங்களை கொண்டு வந்தார். மேலும் இவர் பெண் சிசுவுக்கு ஆதரவாக “மகளுடன்
செல்பி” என்ற புதிய ஆப்பை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஆப்பை
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று தொடங்கி வைத்தார்.
6) அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில்
இமயமலையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட
வாய்ப்புள்ள பகுதியாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஜம்மு
காஷ்மீரின் சில பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில் 3.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
7) கடந்த 18 மாதங்களாக டிரான்ஸ்பிரான்ஸி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு
நடத்திய ஆய்வில் ஆசிய அளவில் லஞ்சம் – ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா
முதலிடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
1) பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதை கத்தார் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2) ஈரானில் நடந்த இரட்டைத் தாக்குதலுக்கு அமெரிக்காவும், சவூதியும் ஆதரவு தந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
3) ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது தென் ஆப்பிரிக்காவில் வசித்த
இந்தியர்கள் நிலமோ, வீட்டுமனை உள்ளிட்ட சொத்துக்களோ வாங்கக்கூடாது என்று
தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து டர்பன் நகரில் 1946ல் மிகப்பெரிய
அறப்போராட்டம் நடைபெற்றது. இதன் 70வது ஆண்டு நினைவு தின விழா டர்பனில்
நேற்று நடைபெற்றது. இதில் காந்தியின் பேத்தி எலா காந்திக்கு வாழ்நாள்
சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
4) தரையிலிருந்து எதிரி நாட்டு கப்பல்களை தகர்க்கும் ஏவுகணையை
வெற்றிகரமாக சோதனை செய்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. மேலும் ஐ.நா.வின் தடை
நெருக்கடிக்கு பிறகு ஒரே மாதத்தில் 5வது முறையாக வடகொரியா இந்த சோதனையை
நடத்தியுள்ளது.
5) நாடுகளுக்கு இடையே போட்டியிடும் களங்களாக கடல்பகுதிகள் மாறுவதை அனுமதிக்க முடியாது என்று ஐ.நா மாநாட்டில் இந்தியா தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
6) மெல்போர்னில் முன்னாள் உலக சாம்பியன்கள் பிரேசில் – அர்ஜென்டினா
அணிகள் இடையே நடந்த நட்புறவு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா 10 என்ற
கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.
7) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்
அரையிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் ரபெல்
நடால் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
8) பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த
பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் 4ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் கரோலினா
பிளிஸ்கோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
9) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில்
இந்திய வீரர் ரோகன் போபண்ணா மற்றும் கனடா வீராங்கனை கேப்ரியாலா
டாப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
10) கிர்கிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு
நிச்சயம் தகுதி பெறுவோம் என இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான
சுனில் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
11) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) மற்றும்
ரக்பி கால்பந்து யூனியன் இணைந்து நடத்தும் ‘சொசைட்டி ஜெனரல் ஜூனியர் தேசிய
ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் 2017’ போட்டி இன்று தொடங்குகிறது. இதில் 21
மாநிலங்களில் இருந்து இரு பிரிவிலும் தலா 21 அணிகள் பங்கேற்கின்றன.
12) சர்பிட்டான் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தோல்வியடைந்தார்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
13) அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் கொள்கைகள் தங்களது
வர்த்தகத்துக்கு பெரிய அளவில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை என்று
தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான விப்ரோ தெரிவித்துள்ளது.
14) நிலக்கரி ஊழல் வழக்கில் பண மோசடியில் ஈடுபட்டது
கண்டுபிடிக்கப்பட்டதால் சட்டீஸ்கர் மாநிலத்தில் அமைந்திருக்கும் உருக்கு
ஆலை சொத்துக்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
15) மாருதி சுசூகி பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சந்தை
மதிப்பு அடிப்படையில் 8வது இடம் பிடித்துள்ளது. மேலும் இன்ஃபோசிஸ்,
ஓ.என்.ஜி.சி ஆகிய பங்குகள் 9 மற்றும் 10வது இடத்தில் உள்ளது.
16) விமான டிக்கெட் பதிவு செய்யும்போது வசூலித்த வரித்தொகையை, அவற்றை
ரத்து செய்த பிறகு பயணிகளுக்கு திருப்பித்தராத விமான நிறுவனங்கள்,
டிக்கெட் இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய
அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17) ரூ.75 லட்சத்துக்கு மேலான வீட்டுக்கடன் வட்டியில் 0.1சதவீதத்தை
பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இது 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி மாத சம்பளம் வாங்கும் பெண்களுக்கு வீட்டுக்கடன் வட்டி 8.55
சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 8.6 சதவீதமாகவும் இருக்கும் என ஸ்டேட் வங்கி
தெரிவித்துள்ளது.
18) மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
19) சில்லறை வர்;த்தகப் பிரிவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஐடிபிஐ
வங்கி சில்லறை கடன் பிரிவிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு
செய்துள்ளது.
20) தொலைத் தொடர்புத் துறைக்கு வழங்கப்பட்டு வரும் கடன் வசதி ரத்து செய்யப்பட மாட்டாது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.