5th June 2017 Daily Tamil Current Affairs UPSC TNPSC SSC IBPS SBI PO Exam
தேசிய செய்திகள் :
1) மத்திய அரசின் சமூக நலத்திட்டங்கள், சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மண்ணெண்ணெய் மானியம் பெறுவதற்கு, ஆதார் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பர் மாதம் 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2) இந்திய இராணுவத்தில் தற்போது பொறியியல், மருத்துவம், கல்வி, சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் பெண்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் போர்முனையில் ராணுவ வீரர்களை போல ஆயுதம் ஏந்தி போரிடும் பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் போரிடும் பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
3) இந்தியா புதிதாக தரையில் இருந்து சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணையை தயாரித்து உள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் சண்டிபூரில் உள்ள ஏவுதளத்தில் நேற்று இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. மேலும் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை இயக்குநர் பினய் குமார் தெரிவித்துள்ளார்.
4) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய இரண்டு வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எடைகுறைவான செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும், எடை அதிகமான செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட் மூலமாகவும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அதிக எடை கொண்ட 4 டன் வரையிலான செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் படைத்த ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை, ஜிசாட் 19 செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்துகிறது.
5) குஜராத்தில் பசுவதை செய்தால் ஆயுள் தண்டனையும், ரூ.5லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்திருத்தத்துக்கு ஆளுநர் ஓம் பிரகாஷ் கோஹ்லி ஒப்புதல் அளித்துள்ளார்.
6) சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து காதி நூல், காந்தி குல்லா மற்றும் தேசியக் கொடிக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
1) இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான ஆகாய மற்றும் கடல் வழி மார்க்கப் பயணத்தை; துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன.
2) அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அணுஆயுத சோதனைகள் ரஷ்யாவுக்கான நேரடியான அச்சுறுத்தல் என்று அந்நாடு கூறியுள்ளது.
3) அபு தாபியை மையமாக கொண்டு செயல்படும் எத்தியாட் விமானம் நிறுவனம் கத்தார் நாட்டிற்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
4) பயங்கரவாத தடுப்பு படைப்பிரிவில் முதல் முறையாக 40க்கும் மேற்பட்ட பெண்களை நியமனம் செய்து பாகிஸ்தானின் சிந்து மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
5) சுற்றுச்சூழலைக் காக்கவும் பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அந்நாட்டுத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள் :
1) ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட உபுல் தரங்காவுக்கு 2 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
2) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜூவென்டஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
3) மினி உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதிய இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றது.
4) தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரீ கோல்டு பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன் பட்டம் வென்றார்.
5) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதியில் விளையாட நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) தொழில்துறை அமைப்பான அசோகம் மற்றும் தாட் ஆர்பிட்ரேஜ் ஆய்வு நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அதுசார்ந்த சேவைத்துறைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் என தெரியவந்துள்ளது.
2) அமெரிக்காவில் ஹெச்1பி விசா வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் டிசிஎஸ் நிறுவனம் விண்ணப்பங்களை மூன்றில் 1 பங்கைக் குறைத்துள்ளது.
3) பணமதிப்பு நீக்க நடவடிக்கை நீண்ட கால நோக்கில் இந்தியாவின் வருவாய் உயர உதவியாக இருக்கும் எனவும் மேலும் வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
4) அனைவருக்கும் 2022ம் ஆண்டில் வீடு என்னும் இலக்கில் மத்திய அரசு செயல்படுவதால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வீடு சம்பந்தமாக புதிய பண்ட்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
5) இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 17 புள்ளிகள் சரிந்து காணப்பட்டுள்ளது. மேலும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.08 புள்ளிகள் சரிந்து 31256.21 புள்ளிகளாக உள்ளது.
6) இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்ப 12 காசுகள் உயர்ந்து ரூ.64.32 காசுகளாக உள்ளது.