14th May 2017 Tamil Current Affairs TN Police TNPSC VAO Group IIA
தேசிய செய்திகள் :
1) ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். ராணுவப் படையினர் தீவிரவாதிகளைப் பிடிக்க தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
20) பாதுகாப்பு பணிகளின் போது வீரமரணம் அடையும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சி.ஆர்.பி.எப்) குடும்பத்தினருக்கு உதவ நன்கொடைகளை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி இந்தி நடிகர் விவேக் ஓபராய், 25 வீடுகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்பை வழங்கி உள்ளார்.
3) அரியானா மாநிலம் பரீதாபாத் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்ட போது அதில் செத்த பாம்பு ஒன்று இருந்தது. இதனால் முதல்-மந்திரி கட்டார் பறக்கும் படை ஒன்றை அமைத்தார். இந்த படையினர் அரியானா மாநில பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
4) நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவருடைய மகன் ராகுல் காந்தி ஆகியோர்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5) மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்க்கமான அரசியல் தலைவர் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உறுதியான முடிவுகளை திறம்பட எடுப்பதில் வல்லவர் என்றும் இந்திரா காந்திக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
6) இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் 107 அடி உயர கம்பத்தில் மூவர்ண கொடியை மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று ஏற்றி வைத்தார்.
7) உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலை ஏறுபவர்கள் ஏறி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான பயணத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 6 இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பன்னாட்டு செய்திகள் :
1) உலகிலேயே உயரமான கட்டிடமான ஜெட்டா டவர் சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணி பொருளாதார நெருக்கடி காரணமாக தாமதாதமாகியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
2) எகிப்து நாட்டில் கல்லறைகளுக்குள் 17 ‘மம்மிகள்’ இருப்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சியின் போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3) அயல்நாடுகளில் பணி புரியும் போது இறந்து போகும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி வழங்க அரசு முயற்சிக்கிறது என்று அயலுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.
4) இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை எதிர்த்து வாதிடுவதற்கான தீவிர செயல்திட்டத்தை பாகிஸ்தான் வகுத்து வருவதாக ‘டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளன.
5) அரசியல் சூழல் சரியாக இருந்தால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று வட கொரிய மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
6) அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐக்குப் புதிய தலைவரை நியமிக்க அதிபர் டிரம்ப் பன்னிரண்டு பேர் பெயர்களை பரிசீலித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7) உலகம் முழுவதும் 99 நாடுகளில் இணைய வைரஸ் தாக்குதல் பாதிப்பு இருப்பதாக இணையப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான காஸ்பர்ஸ்கி லேப் தெரிவித்துள்ளது.
8) போர்ச்சுக்கல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் 1917ல் மேரி மாதா ஆடுமேய்க்கும் 3 சிறார்களுக்கு காட்சி அளித்துள்ளார். இந்த ஆண்டு மேரி மாதா காட்சி அளித்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு போப் பிரான்சிஸ் போர்ச்சுக்கல் சென்றார். அப்போது மேரி மாதாவை பார்த்த பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தாவை புனிதராக அறிவித்தனர்.
9) உலக வர்த்தகத்தை மையப்படுத்தி சீனாவில், ‘ஒரே அமைப்பு ஒரே சாலை’ என்ற பெயரில் இன்றும், நாளையும் மாநாடு நடக்க உள்ளது. இதில் இந்தியா உள்பட 29 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
1) ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
2) டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கமும், மகளிருக்கான 58 கிலோ எடைப் பிரிவின் இறுதியில் இந்திய வீராங்கனை சரிதா வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.
3) கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஹாக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் அரையிறுதியில் ஓ.என்.ஜி.சி அணி ஆர்.சி.எப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தெற்கு மத்திய ரெயில்வே அணி ராணுவ லெவன் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
4) இந்திய கராத்தே சங்கம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான அகில இந்திய கராத்தே போட்டி டெல்லியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கராத்தே சங்க தலைவர் ஆர்.தியாகராஜன், பொதுச்செயலாளர் பரத்சர்மா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
5) ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54வது லீக் ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 வது வெற்றியைப் பெற்ற மும்பை அணி 20 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) சீனா, ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உருக்குப் பொருள்கள் மிகவும் குறைவான விலைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் உருக்குப் பொருள்கள் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
2) மருந்து துறையைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. நிகர லாபம் ரூ.12.6 கோடியிலிருந்து 3 மடங்கு வளர்ச்சி கண்டு ரூ.337.6 கோடியாக காணப்பட்டுள்ளது.
4) எல் ரூ டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் ரூ.1042 கோடி லாபம் ஈட்டியது. 2016-17 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் நிர்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு ரூ.25945 கோடியிலிருந்து 51 சதவீதம் அதிகரித்து ரூ.39300 கோடியாக காணப்பட்டுள்ளது.
5) மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் எப்போதும் இல்லாத வகையில் 30366 புள்ளிகளைத் தொட்டது. அதேபோன்று வரலாற்றில் முதல் முறையாக நிஃப்டியும் 9450 புள்ளிகள் வரை சென்றது.