TNPSC TNUSRB TNTET டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் - பிழை திருத்தம் Part II
1. வறுமைகளை ஒழிப்போம் - வறுமையை ஒழிப்போம்
வறுமை என்பதற்குப் பன்மை கிடையாது. அதுபோலப் புல், நீர், தாகம் ஆகியவற்றுக்கும் பன்மை கிடையாது. ஆடுகள் புற்களை மேய்ந்தன என்பது தவறாகும். ஆடு புல்லை மேய்ந்தன என்பதே சரியாகும். பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு. பல ஆறுகளின் நீர்க் குடித்தேன் என்பதே சரி. நண்பர்களின் தாகங்களை நீக்கினேன் என்பது தவறாகும். நண்பர்களின் தாகத்தை நீக்கினேன் என்பதே சரியாகும்.
2. மனதை - மனத்தை
மனம் ஐ மனத்தை என்றே வரும். பணம் ஐ பணத்தை என்றே வரும். பணதை என்று வருமா? தனம்,வனம், சினம், கனம், இனம், பிணம் ஆகிய சொற்களுடன் ஐ சேரத் தனத்தை, வனத்தை, சினத்தை, கனத்தை, இனத்தை, பிணத்தை என்றே எழுதுதல் வேண்டும்.
3. திருநிறைச் செல்வன் - திருநிறை செல்வன்
திருநிறைச் செல்வன் என்று வல்லினம் மிகுந்து வருதல் தவறாகும். திருநிறை செல்வன் என்பது வினைத்தொகை. வினைத் தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறை செல்வன், திருவளர் செல்வி, திருவளர் செல்வன் என்று வல்லினம் மிகாமல் எழுதுக.
4. புள்ளாங்குழல் - புல்லாங்குழல்
புள்ளாங்குழல் என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் என்று பொருள்.எனவே மூங்கில் குழாயிலிருந்து உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை)
5. கலை கழகம் - கலைக்கழகம்
கலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருள்படும். கலைக்கழகம் என்று வல்லினம்மிகுந்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருள்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.
6. பெறும் புலவர் - பெரும் புலவர்
பெறும் புலவர் என்றால் பரிசைப் பெருகின்ற புலவர் எனப் பொருள்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள்ள பெரிய புலவர் எனப் பெருளாகும். எனவே செயலறிந்து எழுதுக.
7. தந்த பலகை - தந்தப் பலகை
தந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருள்படும். தந்தப்பலகை என்று வல்லினம் மிகுந்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருள்படும். எனவேஇடமறிந்து எழுதுக.
8. செடி கொடி - செடிக்கொடி
செடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருள்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுந்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருள்வரும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.
9. நடுக்கல் - நடுகல்
திருக்குறள், முழுப்பழக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிற சொற்களைப் போல நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம், ஆனால் நடுகல் என்பது வினைத் தொகையாக இருப்பதால் (நட்டகல், நடும்கல், நடுகின்ற கல்) வினைத்தொகையில் வல்லினம் மிகா.
10. காவேரி - காவிரி
காவிரி என்ற சொல்லிலிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது, வளர்ப்பது என்னும் பொருள் உண்டு. (கா - சோலை) காவிரிப்பூம்பட்டினம், காவிரிநாடன் என எழுதுவதே சிறப்பாகும்.
ADS HERE !!!