வேன் டிரைவரிடம் ஹெல்மெட் கேட்டு அடாவடி! ரூ.100 அபராதம் விதித்து சாதனை (Vikatan, 15-9-2017)
கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். நேற்று முன்தினம் மாலை, இவர் தன் 'டாடா ஏஸ்' வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, காருண்யா நகர் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் வாகனத்தை மறித்து சோதனையிட்டுள்ளார். ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கவே, என்ன செய்வதென்று தெரியாமல், 'நான் நிறுத்தியது நிறுத்திவிட்டேன். அதனால் கேஸ் போடாமல் விடமாட்டேன் ' என கர்ணணிடம் கூறியுள்ளார்.
ஹெல்மட் அணியாததால் அபராதம்
பின்னர், 'நீ ஹெல்மெட் அணியவில்லை. அதனால், அபராதம் 100 ரூபாய் மற்றும் ஸ்டேஷன் செலவுக்கு ரூ. 200 என மொத்தம் 300 ரூபாய் கொடுத்துவிட்டுப் போ' எனக் கூறியுள்ளார். 'டாடா ஏஸ் வாகனத்தில் வந்த நான் ஏன் ஹெல்மெட் அணிய வேண்டும்' என கருணாகரன் கேட்கையில், 'என்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பதாக கேஸ் போட்டுவிடுவேன்' என அவரை மிரட்டியுள்ளார். சம்பவத்தின் உச்சகட்டமாக, வேனில் வந்தவர் ஹெல்மட் அணியவில்லை என ரூ.100 அபராதம் விதித்து ரசீதும் கொடுத்துள்ளார்.
சமூக விழிப்புஉணர்வு இயக்கத்தில் செயல்பட்டு வந்த கருணாகரன், டாடா ஏஸ் வாகனத்தில் சென்றவருக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதம் என ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலீஸ் தந்த ரசீதை பரப்பினார். கடமையை நேர்மையாகச் செய்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்க வேண்டுமென கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் சிலர் இன்ஸ்பெக்டரை கேலிசெய்துவருகின்றனர்.
இதுகுறித்து காருண்யா நகர் போலீஸ் நிலையத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை” என்று மறுத்தனர். 'சங்கர நாராயணன் என்ற பெயரில் சப் -இன்ஸ்பெக்டர் அங்கே பணியில் இருக்கிறாரா' என்று கேட்ட போது, 'அப்படி யாரும் இங்கே இல்லை ' என்று மறுத்தனர்.
இதற்கிடையே, நேற்று இரவு கருணாகரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன், அவரிடம் சமாதானம் பேசி, மன்னிப்புக் கேட்டதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
Vikatan News Update (16-09-2017)
'வேன் டிரைவருக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதம் ' என மீடியாக்களில் செய்தி வெளியானது. தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி.மூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனிடம் விசாரணை நடத்தினார். பின்னர், எஸ்.பி மூர்த்தி கூறுகையில், ''ஆவணங்கள் சரியாக இருந்தாலும் வேன் டிரைவர் சீருடை அணியவில்லை. அதற்காக ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், ரசீதில் ஹெல்மெட் என்று சங்கரபாண்டியன் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார். ஹெல்மெட் அணியவில்லை என்றால், ரூ.100 அபராதம் விதிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.