22nd May 2017 Tamil Current Affairs TN Police TNPSC VAO Group IIA

22nd May 2017 Tamil Current Affairs TN Police TNPSC VAO Group IIA

தேசிய செய்திகள் :

1) இந்திய கப்பல் படைக்கு 630 மில்லியன் டாலர் மதிப்புடைய தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் நீண்ட தூர ஏவுகணை அமைப்பை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஏரோஃபேஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

2) உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

3) நிலப்பரப்பு மாற்றத்தை அறிவதற்கான மென்பொருளைப் பயன்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் காடுகளின் பரப்பளவு பற்றி ஆய்வு நடத்தினர். வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்தியா 2305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப் பகுதிகளை இழக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

4) பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். மேலும் அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

5) இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் வசதி கிடைக்க மூன்று ஜிசாட் வகை தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும் இவற்றில் உள்ள சிறப்பு டிரான்ஸ்பாண்டர்களின் அதிக அலைவரிசை ஒலிக்கற்றைகள் (சிக்னல்) இன்டர்நெட் வேகத்தை அதிகமாக்கும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறியுள்ளார்.

6) சிக்கிம் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், சீன எல்லையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை போலிசார், சாஸ்த்ர சீமா பால் ஆகிய துணை ராணுவப் படை வீரர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க உள்துறை அமைச்சகம் தொடங்கிய ‘மொபைல் ஆப்’-ஐ பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

7) நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் மின்தேவையை பூர்த்தி செய்ய, சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் சோலார் மின்தகடுகளை பொருத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையமான கொல்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலும் சோலார் மின்தகடு பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளன.

8) தொழில் பயிற்சி நிலையங்களுக்கு (ஐடிஐ) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

1) வடகொரியா மீண்டும் அதிரடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

2) ஆப்கானிஸ்தானில் ஜாபூல் மாகாணத்தில் உள்ள ஷாக் ஜாய் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் சோதனை சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

3) லண்டன் நகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த ரோஹனா என்ற பெண் மாநகராட்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4) பணியின் போது உயிர்நீத்த அமைதிப் படையினருக்கு ஐ.நா சபை ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. அதன்படி காங்கோவில் இந்திய அமைதிப் படையில் பணியாற்றி உயர்நீத்த பிரிஜேஸ் தாப்பா மற்றும் லெபனானில் பணியாற்றிய ரவிக்குமார் ஆகியோருக்கு ஐ.நா அமைதிப் படையின் சர்வதேச தினமான 24ம் தேதி டேக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் விருது வழங்கப்பட உள்ளது.

5) ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டு ஆயிரக்கணக்கோர் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் முறையான காரணம் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள சுமார் 7500 போலி அகதிகளை வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

6) அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தனது அமைப்பு கண்டுபிடித்துள்ள புதிய நுண்ணுயிரிக்கு இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

1) ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் புனே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி 3 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.

2) இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

3) இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, ருமேனியாவைச் சேர்ந்த ஹாலெப்பை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

4) பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மகதி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து மலேசியாவின் முகமது சயபிக் கமாலை வீழ்த்தி கோப்பையை வென்றார்.

5) சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் தொடர் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இன்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க்குடன் மோதுகிறது.

6) ஆசிய பிளிட்ஸ் செஸ் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை வைஷாலி தங்கப் பதக்கம் வென்றார்.

7) பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரில் நடைபெற்ற போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண்-பூரவ் ராஜா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

8) மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண்ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

9) பி.டி.சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 58ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி, பெரியகுளம் பிஎஸ்டி நினைவரங்கத்தில் மே 15ம் தேதி தொடங்கியது. இதில் தில்லி விமானப்படை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

1) சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதால் நாட்டின் பணவீக்கம் 2 சதவீதம் குறையும் என்று மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

2) பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது. மேலும் டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழுமங்களின் சந்தை மதிப்பு தலா 1லட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது.

3) 2014-2015ம் ஆண்டில் சர்வதேச அளவில் முதல் 100 இடங்களில் இருக்கும் சொகுசு பிராண்ட்களின் விற்பனையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் மூன்று இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன.

4) இன்று வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 227.44 புள்ளிகள் உயர்ந்து 30692.36 புள்ளிகளாக உள்ளது.

5) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.64.49 காசுகளாக உள்ளது.

6) ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்த பிறகும், மொபைல் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

7) வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த விசாகப்பட்டினம் முதல் சென்னை வரை கடற்கரை சாலை அமைக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

8) உள்நாட்டு விமான சேவையை 91லட்சம் மக்கள் பயன்படுத்தியதால், கடந்த ஏப்ரல் மாதத்தில், விமான பயணிகளின் எண்ணிக்கை 15.15 சதவீதம் அதிகரித்துள்ளது என விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .